திங்கள், 9 நவம்பர், 2015

வங்கக்கடலில் புயல் சின்னம்; காரைக்கால் சென்னை இடையே இன்று கரையை கடக்கும்.


வங்கக்கடலில்  நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி உள்ளது. இந்த புயல் சின்னம் காரைக்கால் -சென்னை இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.




வடகிழக்கு பருவமழை கடந்த 28-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19 செ.மீ. மழைப்பொழிவு பதிவானது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், இதனால், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் எஞ்சிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கக்கடலில்  நேற்று (நேற்று முன்தினம்) நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்த புயல் சின்னம் இன்று (நேற்று) மாலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரிக்கு கிழக்கு, தென் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை (இன்று) இரவு காரைக்கால்-சென்னை இடையே புதுச்சேரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) கடலோர மாவட்டங்களில்  பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

எஞ்சிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மேலும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வட கடலோர மாவட்டங்கள்  மற்றும் அதனை ஒட்டியுள்ள ராமநாதபுரம் கடற்கரைகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.


சென்னையை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். தரைக்காற்று  பலமாக  இருக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழைப்பொழிவை பெறும்.

கடந்த ஆண்டு இந்த பருவமழை காலத்தில் 2 சதவீதம் குறைவான மழை அளவை பெற்றிருந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தமிழகம் 22 செ.மீ. மழை அளவை பெற்றுள்ளது.

அரபிக்கடல்  பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான ‘மேக்’ புயல், சொக்கோத்ரா தீவுக்கு கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.  இந்த புயல் மேற்கு நோக்கி நகர்ந்து ஏடன் வளைகுடா வழியாக சென்று, ஏமன் கடற்கரை அருகே வருகிற 10-ந் தேதி (நாளை)  மாலை  கரையை  கடக்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்ககடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு  மண்டலமாக  மாறியதால்  கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீனவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் சென்னை துறைமுகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து  துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கும் இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் பாம்பனில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பாபநாசம், மணிமுத்தாறு  ஆகிய  இடங்களில் தலா 10 செ.மீ., அம்பாசமுத்திரம் 9 செ.மீ., நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., கீழ் கோதையாறு, மணியாச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., ராமேசுவரம், ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகாதேவி 6 செ.மீ., பாளையங்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, குன்னூர், காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., சென்னை மீனம்பாக்கம், ராமநாதபுரம், ஆயிக்குடி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி துறைமுகம், செம்பரம்பாக்கம், திருச்செந்தூர், மாதவரம், ஸ்ரீவைகுண்டம், கோத்தகிரி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...