சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண் சிங்கப்பூரில் 15-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் பால் வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி பெயர் உஷா. நேற்று காலையில் சீனிவாசன் தனது மனைவி உஷாவுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். உஷா கதறி அழுதபடி இருந்தார். இருவரும் சேர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எங்கள் மகள் பெயர் தீபிகா (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.20 லட்சம் பணம் செலவு செய்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் என்ஜினீயர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்திற்கு பிறகு எனது மகள் கணவரோடு சிங்கப்பூர் சென்று விட்டாள். தற்போது அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
எனது மகளின் மாமனார், மாமியார் வரதட்சணை கொடுமை புரிந்தனர். மேலும் ரூ.15 லட்சம் பணம் கேட்டு சித்ரவதை செய்தனர். எங்கள் மகள் போன் செய்து எங்களுக்கு இந்த தகவலை தெரிவித்தாள்.
இந்த நிலையில், எங்களது மகள் தீபிகா சிங்கப்பூரில் 15-வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக அவளது கணவர் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கேட்டு நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
அவளை 15-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்திருப்பார்கள் என்று அஞ்சுகிறோம்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி எனது மகளின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக