திங்கள், 9 நவம்பர், 2015

கூலித் தொழிலாளி சரவண முத்துவின் புதிய கண்டுபிடிப்புகள்.


படித்து விஞ்ஞானியானவர்கள் ஏராளம். அனுபவத்தாலும், ஆழ்ந்த சிந்தனையாலும் விஞ்ஞானியான பாமரர்கள் சிலர். அவர்களில் ஒருவர் சரவணன் முத்து. வயது 37. அன்றாடம் வேலைக்கு சென்று வீடு திரும்பி, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்  இவர்.


தனது கண்டுபிடிப்புகளை  அவரே பட்டியலிடுகிறார்.

“முதலாவதாக ரிமோட் மூலம் செயல்படும் கழிவறையை உருவாக்கினேன். அடுத்து மாசு கட்டுப்பாட்டு சுவாச எந்திரத்தை செய்தேன். அதற்கடுத்து பெண்கள் எளிதாக பயன்படுத்தும் தேங்காய் துருவும் எந்திரம், தேங்காய் உரிக்கும் கருவி, இருட்டில் எழுத உதவும் பேனா போன்றவைகளையும் உருவாக்கினேன்’’ என்கிறார்.

இந்த ஐந்து படைப்புகளையும் வீட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார், சரவணன் முத்து.

தனது கண்டுபிடிப்புகளின் பயன்பாடு பற்றி விளக்குகிறார்!

ரிமோட் கழிவறை:

‘‘நோயாளிகள் மற்றும் முதியவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க எழுந்திருப்பது கடினம். அவர்களுக்கு உதவ இதை நான் கண்டுபிடித்தேன். கட்டில் அமைப்பில் இதை வடிவமைத்திருக்கிறேன். கட்டிலின் தலைப்பகுதியில்  ரிமோட்  இருக்கும். அதில் 3 சுவிட்சுகள் பொருத்தியுள்ளேன்.

 முதலாவது  சுவிட்சை ‘ஆன்’ செய்தால் கட்டிலின் மேற்பரப்பில் கதவு போன்ற அமைப்பு திறந்து கொள்ளும். 2–வது சுவிட்சை போட்டால் ‘குளோசெட்’ மேலெழும்பி வரும். படுத்திருப்பவர் அப்படியே அதில் மலம் கழிக்கலாம். அடுத்து 3–வது சுவிட்சை ஆன்செய்ய வேண்டும். அப்போது குழாயில் தண்ணீர்  பீய்ச்சி  அடித்து  சுத்தம்  ஆகிவிடும்”

சுவாச எந்திரம்:

‘‘செப்டிக்  டேங்க் மற்றும் பாய்லருக்குள் இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் சில நேரங்களில் அசுத்த காற்றை சுவாசித்து மயக்கமடைய நேரிடுகிறது. உயிரிழப்பும் ஏற்பட்டுவிடுகிறது. அதை தவிர்க்கவே  இந்த  எந்திரத்தை  உருவாக்கியுள்ளேன்.

 இதை உபயோகிக்கும் போது காற்றை சுத்தப்படுத்தும் கருவியை உடலோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்து  சுத்தமான காற்றை கொண்டு வரும் குழாய், மூக்கோடு பிணைக்கப்படும் ‘மாஸ்க்கில்’ இணைக்கப்பட்டு இருக்கும்.

காற்றை சுத்தப்படுத்தும் இந்த கருவி 3 நிலைகளில் செயல்படும். சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்தமான காற்றை உள்வாங்கி சுத்தம் செய்வது முதல்நிலை.  அங்கிருந்து தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தப்படுவது 2–வது நிலை. பின்னர் பஞ்சில் சுத்தப்படுத்தப்படுவது 3–வது நிலை. இப்படி 3 நிலைகளில் சுத்திகரிக்கப்படுவதால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். ஆபத்தின்றி  பணியை  மேற்கொள்ளலாம்”

அடுத்ததாக தேங்காய் துருவும் எந்திரம் செயல்படுவதை விளக்கினார். மிக்சி ஜார் போலவே இது உள்ளது. மிக்சியில்தான் அதை பயன்படுத்த வேண்டும். சாதாரண மிக்சி ஜாரில் பிளேடுகள் இருக்கும். ஆனால் இதில் தேங்காயை துருவ பல் போன்ற இரும்பினால் ஆன கூம்பு இருக்கிறது. இதன்மேல் அரைமூடி தேங்காயை கவிழ்த்து, ஜாரை மூடிவிட்டு மிக்சியை ஓடவிட வேண்டும். சில வினாடிகளில் தேங்காய் துருவப்பட்டு விடுகிறது. இதை சந்தைப்படுத்தினால்  பெண்களுக்கு  வேலை  மிக எளிது,  என்கிறார்.

இவர் கண்டுபிடித்திருக்கும் தேங்காய் உரிக்கும்  கருவியையும் பெண்கள் எளிதாக  பயன்படுத்தலாம். கருவியின் இரும்பு முனையில் தேங்காயை குத்தி, கருவியின் அடிப்பாகத்தில் காலால்  மிதித்தால் தேங்காய் மடல் பிய்ந்து விடுகிறது.

இருட்டிலும் எழுத பயன்படும் பேனா அனைவரையும் கவர்கிறது. பேனாவின் முனையில் வெளிச்சம் வரக்கூடிய வகையில் எலக்ட்ரானிக் இணைப்புகளை இவர் வடிவமைத்துள்ளார். இந்த பேனாவை பயன்படுத்த சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய கண்டுபிடிப்புகளோடு சரவணன் முத்து, நின்று  விடவில்லை. விஞ்ஞானியாக தன்னை நிலைநிறுத்தும் அளவுக்கு அறிவியல் பூர்வமாக மற்றொரு கண்டுபிடிப்பையும் உருவாக்கியுள்ளார். அது, கடல் அலையில் இருந்து  மின்சாரம்  தயாரிப்பது.

கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அதைவிட நவீன யுக்தியை தனது திட்டத்தில் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான இவரது வரைவறிக்கையை தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் அங்கீகரித்துள்ளதாக கூறினார்.

மேலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரை தொலைபேசியில் பாராட்டியுள்ளார். அதை தனது வாழ்வின் பெரும்பாக்கியமாக  கருதுகிறார். அந்த தருணத்தை சரவணன்முத்து நினைவு கூர்ந்தார்.

 “அப்துல்கலாம் மறைவதற்கு 7 மாதத்துக்கு முன்பு இது நடந்தது. என் நண்பர் மூலம் அப்துல்கலாம் நம்பரை தெரிந்து தொடர்பு கொண்டேன். அவர் என்னிடம் பேசினார். என்னை மிகவும் பாராட்டினார். உற்சாகப்படுத்தினார். இதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அவர் மறைந்த நாளில் அவரது நினைவாக  நான்  கண்டுபிடித்ததே மாசு கட்டுப்பாட்டு சுவாச எந்திரம்” என்று  நெகிழ்ச்சியோடு  கூறினார்.

இவைகளை கண்டுபிடித்திருக்கும் சரவணன்முத்து, என்ஜினீயரிங் பட்டதாரியாக இருப்பாரோ என்று எண்ணத்தோன்றும். அவர் கூலி தொழிலாளி.

 3–ம் வகுப்புடன் அவரது படிப்பு முடிந்துவிட்டது. எல்லாம் அனுபவப்பாடம்தான். அவருடைய தந்தை கார் மெக்கானிக். அதனால் இவர் டிங்கரிங் தொழில் பழகி, தற்போது வெல்டிங் பட்டறையில் பணிபுரிகிறார். தனது  கண்டுபிடிப்புகளை  சந்தைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

தென்காசியை சேர்ந்த  சரவணன் முத்து, நாகர்கோவில் தளவாய்புரத்தில் மனைவி கிருஷ்ணம்மாள், மகள் அகிலா, மகன் ஆகாஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...