சென்னையில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
சென்னை மாநகர சாலைகளில் திரும்பிய திசையெல்லாம் மழை நீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலைகளில் சென்றவர்கள் அதில் சிக்கினர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் வெள்ளத்தில் தவறி விழுந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்கள் பலர் தாங்கள் சென்ற வாகனம் பழுதானதால் மழை வெள்ளத்தில் சிக்கி தங்களது வண்டியை தள்ளிக் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இவர்களுக்கு இளைஞர்கள் சிலர் உதவி செய்து வெள்ளத்தில் இருந்து வாகனங்களை வெளியில் கொண்டு வந்தனர்.
பெரம்பூர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழை காலங்களில் வெள்ளம் தேங்குவது வழக்கம். இதில் பொது மக்கள் சிக்காமல் இருப்பதற்காக அங்கு பாலம் கட்டப்பட்டது.
இதன் பின்னர் ரெயில்வே பாலத்தில் அடியில் தேங்கும் மழை வெள்ளத்தில் சிக்காமல் வாகன ஓட்டிகள் தப்பி விடுகிறார்கள். இந்த பாலத்தின் வழியாகத்தான் அயனாவரம், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் வருவார்கள்.
பெரம்பூர் பாலத்தில் ஏறி ஜமாலியா பகுதிக்கு வாகனங்களில் வருபவர்கள் மழைக்காலங்களில் அங்கு தேங்கி நிற்கும் வெள்ளத்தில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. நேற்று பெய்த மழையிலும் இங்கு சாலையின் இருபுறமும், இடுப்பளவுக்கு இங்கு தண்ணீர் தேங்கியது.
இந்த வழியாகவும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். பஸ், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் இந்த வெள்ளத்தை கடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிள்களை மூழ்கடிக்கும் அளவுக்கு மழை வெள்ளத்தில் அலை எழும்பியது. இதில் பலரது மோட்டார் சைக்கிள்கள் பழுதானது. பெண்கள் பலர் பழுதான தங்களது மோட்டார் சைக்கிள்களை அங்கேயே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி முழுவதுமாக நிரம்பியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
பெரம்பூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழேயும் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோல பல இடங்களில் சாலைகளிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் போலீசாரே தடுப்பு வேலிகளை அமைத்து காவல் காத்தனர்.
சென்னையில் சில மணி நேரங்கள் மழை பெய்தாலே, மாநகர சாலைகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
அதேபோல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வருங்காலங்களில் மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகைப்படங்கள்.. நவின்குமார்.
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக