செவ்வாய், 10 நவம்பர், 2015

முதல் திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி...அனுபவித்த சோதனைகள்.

  இந்தியாவின்  முதல் திருநங்கை  எஸ்.ஐ. சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி...!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு

200 ரூபாயோடு வீட்டை விட்டு வெளியேறி, போக்கிடம் இல்லாமல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் படுத்துக் கிடந்த பிரித்திகா யாஷினி, இன்று திருநங்கைகளின் நம்பிக்கை நட்சத்திரம்.


 இந்தியாவின்  முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற அங்கீகாரத்தைப்  பெற அவர்  அனுபவித்த வலி நிறைந்த அத்தியாயங்கள் பல...

சேலம்  கந்தம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கலையரசன்-சுமதி தம்பதிக்குப் பிறந்தவர்  பிரித்திகா யாஷினி.  ஒரே அண்ணன். பிளஸ் 2 படிக்கும் போது தன்னிடம் பெண்மைத் தன்மை அதிகம் இருப்பதை உணர்ந்திருக்கிறார்  பிரித்திகா. 

பேச்சில் இருந்த நளினத்தை சக மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். தனிமையில் அழுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருந்தார்.

வீட்டிலும் பெண்மைத் தன்மையோடு உலா வருவதை அவரது பெற்றோர் ரசிக்கவில்லை. பிளஸ் 2 படிப்பிற்குப் பிறகு சேலம், அரசுக் கல்லூரியில் பி.சி.ஏ படிப்பில் சேர்ந்தார். அங்கும்  சக  மாணவர்களின்  கேலிக்கு ஆளானார்.

 இதனால்  வழக்கமான  நேரத்தில் கழிவறைக்குச் செல்லாமல் வகுப்பு நடக்கும் நேரத்தில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 'தான் ஒரு திருநங்கை' என்று தெரிந்து  மிகவும்  பரிவு காட்டிய யாஷினி என்ற பெண்மணியின் நினைவாக தன் பெயரோடு யாஷினியை சேர்த்துக்கொண்டார்  பிரித்திகா.

தினம் யாஷினியின் பெண்மை நிரம்பிய செயல்பாடுகள் பெற்றோருக்கு கோபத்தை வரவழைக்க, மந்திரவாதிகளிடம் கூட்டிச் சென்றிருக்கின்றனர்.மந்திரவாதியின் வேப்பிலை அடியைத் தாளாமல் பெற்றோரிடம்  சண்டை  போட்டிருக்கிறார்.

இதற்கு  அடுத்து, டாக்டர்களிடம் கூட்டிச் செல்லவும், அவர்கள் ஒரு கட்டத்தில் கீழ்ப்பாக்கம்  மனநல மருத்துவ மனையில் சிசிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

'வாழ்க்கையில்  உச்சகட்ட கொடுமைகளை அனுபவித்த சமயம் அது' என்கிறார் யாஷினி.  இதன்  பின்னர், யாரிடமும் சொல்லாமல் 2011-ம் ஆண்டு சென்னை வந்த பிரித்திகா,திருநங்கை அமைப்பான 'தோழி' யில் சேர்ந்து, கிடைக்கும்  வேலைகளைச்  செய்தார்.

தனியார் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை கவுன்சிலர், சமூக இயக்கங்களுடன்  இணைந்து  செயல்படுவது என செய்து வந்தவர்,  தற்போது ஒரு  கணினி  செயலி  நிறுவனத்தின்   தூதுவராக  இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது சான்றிதழ்களில் உள்ள ஆண் பெயரை பிரித்திகா பெயருக்கு சட்டரீதியாக மாற்றித் தரும்படி வழக்கறிஞர் பவானி சுப்பராயனை சந்தித்தார்.

ஒரு ஆர்வத்தில் எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பித்தார்.  விண்ணப்ப மனுவில் திருநங்கைக்கென தனியாக பிரிவு இல்லாததால் பெண் என டிக் அடித்துவிட்டார். ஆனால், சான்றிதழ் முழுக்க ஆண்பெயரில் இருந்ததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பவானி உதவியோடு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். உடனடியாக அவர் தேர்வு  எழுத  நீதிபதி  மகாதேவன்  உத்தரவிட்டார்.

தேர்வில் 28.50 மதிப்பெண்  எடுத்தார். பெண்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 25. சான்றிதழில் ஆண் பெயர் இருந்ததால் கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்குள் அவர் வரவில்லை. எனவே,  அவர்  வெற்றி பெறவில்லை  என  அறிவித்தது  காவல்துறை.

மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினார். 'திருநங்கைக் கெனகட்-ஆஃப் எதுவும் குறிப்பிடாத போது காவல்துறையின்  விளக்கத்தை ஏற்க முடியாது. அவருக்கு  உடல் தகுதிதேர்வு  வைக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பந்து எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட சில விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்,  ஓட்டப்பந்தயத்தில் 1.1 நிமிடம் தாமதமாகக் கடந்தார் எனச் சொல்லி  'தேர்ச்சிபெறவில்லை’  என  தெரிவித்தனர்  அதிகாரிகள்.

மீண்டும் உயர்  நீதிமன்றத்தை நாடி,'நான் ஓடியபோது எடுத்த வீடியோபதிவை  பார்க்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு என்னை அனுமதிக்க வேண்டும்' எனகோரிக்கை வைக்க, வேறு வழியில்லாமல் அவருக்கு  நேர்முகத்  தேர்வு  வைத்தது  போலீஸ்.

இறுதியாக, நேற்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் சீலிடப்பட்ட கவரில் பிரித்திகா தேர்வு குறித்த தாள்களை கொடுத்தனர். அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா,

 "தமிழக காவல் துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி  முழு உடல் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு சட்டப்படி எஸ்.ஐ பணி வழங்க வேண்டும். அவர் பணியில் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம்  அளிக்கும் வகையில் செயல்படவேண்டும். மேலும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில்  தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும்"  என உத்தரவிட்டனர்.

திருநங்கை பிரித்திகா யாஷினியின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. அவரைப்பற்றி வந்த செய்திகளால் மகிழ்ச்சியடைந்த கலையரசன், சுமதி தம்பதியினர்  பிரித்திகாவோடு  பேச ஆரம்பித்து  விட்டனர்.

''சின்ன வயசுல இருந்தே போலீஸ்  வேலையில் சேர வேண்டும் என்பது கனவாக  இருந்தது. அது இன்று நிறைவேறிவிட்டது. திருநங்கைகளுக்கு என தனிநபர் மசோதா,  இடஒதுக்கீடு  மசோதா போன்றவை நிறைவேறினாலும்  எதுவும்  செயல்பாட்டுக்கு வரவில்லை.  அதற்காக போராட வேண்டும்.

திருநங்கைகளுக்கு என ஏற்படும் பாலியல் கொடுமை உள்பட எல்லா கொடுமைகளையும் நான் அனுபவித்திருக்கிறேன். இனி என்போன்ற திருநங்கைகளுக்கு  அரசு  வேலை  கிடைக்க  முயற்சி  செய்ய  உள்ளேன்.

மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாள குறியீடு, அரசு வேலை விண்ணப்பங்களில்  இடம் பெற இந்தத்தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இனி ஐ.பி.எஸ் ஆவதற்கான  முயற்சிகளில் ஈடுபடுவேன்" என்கிறார். பிரித்திகா யாஷினி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...