தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புதுச்சேரி – காரைக்கால் இடையே 330 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலை கொண்டிருந்தது.
இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி புதுச்சேரி அருகே 110 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இன்று பிற்பகல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை அய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
அப்போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்க கூடும் என்று கடலோர மாவட்டங்களில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும் என்று கூறினார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
புயல் சின்னம் கரையை கடப்பதால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, ராமேசுவரம் துறைமுகங்களில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முதல் சென்னையில் பலத்த மழை கொட்டுகிறது.
இன்று காலையும் பலத்த மழை நீடித்தது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்பட வட மாவட்டங்களிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக