ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மகளை மணம் முடித்து கொடுக்கும் தந்தையின் உணர்வு போராட்டம்.


பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த அன்பு மகள் பட்டுச்சேலை அணிந்து மணமேடையில் மணப்பெண்ணாய் வீற்றிருக்கும்  காட்சியை பார்த்ததும் ‘அட என் பொண்ணா.... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’ என்று தாய் பெருமையுடன் திருஷ்டி போட்டுக்கொள்வாள்.

எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கும் தந்தையின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அது ஆனந்த  கண்ணீர்  என்று  சொந்த  பந்தங்கள் நினைக்கும்.

ஆனால்  அந்த கண்ணீருக்கான அர்த்தம் அவனுக்கு மட்டும்தான் புரியும். மகள் பிறந்து  இருக்கிறாள் என்று நர்சு ஓடிவந்து சொன்னதும்... அடுத்த சில விநாடிகளில்  கைகளில் தூக்கி கொஞ்சியதும்... பிஞ்சு கையை பற்றிக்கொண்டு நடந்ததும்... பள்ளிக்கு அழைத்து சென்று மகிழ்ந்ததும்... கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து அவள் முகத்தில் ஏற்படும் சிரிப்பையே தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு வாழ்ந்த காலம் என்றும்  பசுமையான  வசந்த காலம்.

இனி அவள் என்னோடு இருக்கப்போவதில்லை. புதிய உறவை ஏற்படுத்தி குலம்  தழைக்க  குடும்ப  பெண்ணாய்  பொறுப்பு ஏற்க போகிறாள்.

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய  இடம்  பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில்,  பெண்ணைவிட   பெண்ணைப்  பெற்றவர்களுக்கு குறிப்பாக  தந்தைக்கு  நேரும்  உணர்வுப் போராட்டம்  சொற்களில்  அடங்காதது.

அவ்வாறாக உணர்ச்சி வசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில்  ஆற்றிய  உரைதான்  இது.

இந்த உரையை 'எனது மகளின் புதிய குடும்பத்தினரே' என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்து விட்டேன். 

அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகி விட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே  நான்  விரும்புகிறேன்.

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள்  அவளை  மகிழ்ச்சியாக  வைத்துக் கொள்ள  வேண்டும்.

நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளலோடு இருப்பாள் என நம்புகிறேன்.  இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை  திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை  ஏதும்   இல்லாமல்   பார்த்துக்கொள்ளுங்கள்."

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என்  இதழ்களில்  புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை  நான்  திருமணம்  செய்து  கொடுக்கிறேன்.

 ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை  உங்களுக்கு  தாரை  வார்த்துத்  தருகிறேன்.

 அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதாவது  அவள்  சிறு  தவறு  செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக  திட்டுங்கள்  ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது  சிறு கவனம்  அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.

அவளது பொறுப்புகளிலிருந்து எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், ‘நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய்  என  நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை  மகிழ்ச்சியாக  வைத்துக்  கொள்ளுங்கள்.

அவளை மாதக்கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள்  குரலை  தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக  வைத்துக்  கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய மருமகனே... இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது  மகளை  மகிழ்ச்சியாக  வைத்துக்  கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த யதார்த்தமான, உருக்கமான, உணர்வு பூர்வமான வெளிப்பாடுதான் பெண்களை பெற்ற ஒவ்வொரு தந்தையின் இதயத்தில் இருந்தும் வெளிப்படும்.

இதை உணர்ந்து நடந்தால் எந்த குடும்பத்திலும் ஸ்டவ் வெடிக்காது – விவாகரத்து பேச்சு வராது. அன்பில் திளைப்பார்கள்.

முத்துப்பேட்டையில் சமீப காலமாக திருமணமாகி ஒருசில மாதங்களில் தாய் வீட்டுக்கு திரும்பி வேதனை அனுபவிக்கும் சம்பவங்கள் நிறைய நடந்து வருகிறது. 

இதை படித்தாவது அவர்கள் திருந்துவார்களா.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...