சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த வேலூர் மாவட்ட பெண்ணின் கையை முதலாளி வெட்டிய சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் (வயது 55). இவர் வீட்டு வேலை பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு முதலாளியால் அவர் துன்புறுத்தப்பட்டார். மேலும் கஸ்தூரியின் கையும் வெட்டப்பட்டது.
இது பற்றி அறிந்த கஸ்தூரியின் உறவினர்கள் அவரை தாய்நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சவுதி அரேபியாவில் இந்தியப் பெண் ஒருவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் சவுதி அரசு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான கண்டிக்கத்தக்க சம்பவம்.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இச்சம்பவத்துக்கு காரணமானவர் மீது உடனடியாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக