செவ்வாய், 1 டிசம்பர், 2015

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தினர் திரையரங்கிலிருந்து வெளியேற்றம்: வலுக்கும் கண்டனம். வீடியோ இணைப்பு.


சினிமா திரையரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தை, அங்கிருந்தவர்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றிய  சம்பவம் நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



இது  தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மும்பையில் குர்லா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில், நேற்று திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பாக இந்திய தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது அனைவரும் எழுந்து நின்ற வேளையில்,ஒருவர் மாத்திரம் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். அவரை எழுந்து நிற்குமாறு,அங்கு கூடியிருந்த சிலர் கூறியுள்ளனர்.  அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், எழுந்து நிற்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.

 பின்னர் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தியதால், தன் முழங்காலில் அடி பட்டுள்ளதால்  தன்னால்  எழுந்து  நிற்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சில மக்கள், அவரை சினிமா திரையரங்கை விட்டு செல்லுமாறு கூச்சல் போட்டனர்.  இதற்கு  முதலில் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய தம்பதியினர், ஒருகட்டத்தில், கூட்டத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, திரையரங்கை விட்டு வெளியேறினர்.

 அவர்கள் வெளியேறிய பின்னரே அத்திரையரங்கில் சினிமா போடப்பட்டுள்ளது. அவருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

படம் பார்க்க வந்தவர்களை, அச்சுறுத்தி, திரையரங்கத்தை விட்டு வெளியேற்றிய இந்த சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான இக்பால் சக்லா உள்ளிட்ட பலர், இது சட்டத்திற்கு புறம்பானது இல்லெயென்றும், தேசிய கீத அவமரியாதை சட்டம் 1971-ன் படி, தேசிய கீதம் பாடவிடாமல் இடையூறு செய்வதுதான்  குற்றமென்றும், தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காதது குற்றம்   என்று   எந்த சட்டத்திலும் இல்லை  என்றும் தெரிவித்துள்ளனர்.



இந்த தேசிய கீதம்...

சற்றுமுன் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத ஒரு முஸ்லிம் தம்பதியர் மும்பையில் ஒரு திரை அர்ங்கிலிருந்து அவமானப்படுத்தி வெளியேற்றியது பற்றி ஒரு தொலைக் காட்சியில் கருத்து கேட்டார்கள்.

நான் சொன்னவை:

1.கேளிக்கை அரங்குகளில் இப்படி தேசிய கீதங்களை ஒளிபரப்பி எல்லோரையும் வணக்கம் செய்யச் சொல்வதும், அதை மீறி நடந்தவர்களை அவமானப் படுத்தி வெளியேற்றுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

அந்த நிகழ்ச்சி எப்படி  நடந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். ஏதோ சிசி டிவியில் பார்த்து விட்டு ஆபரேடர் ரூமிலிருந்து யாரோ வந்து அவர்களை வெளியேற்றி இருந்திருக்கப் போவதில்லை. பக்கத்தில் இருந்தவர்கள்தான் அவர்களைக் கண்டித்து அப்படிச் செய்திருக்க வேண்டும்.

 வேறு யாரும் இப்படி உட்கார்ந்து கொண்டிருந்தால் கூட இப்படி நேர்திருக்காது. ஒரு முஸ்லிம் தம்பதி என்பது இந்தச் சம்பவத்தில் ஒரு பங்கு வகித்திருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு வெறுப்பு இங்கே கட்டமைக்கப்படுவது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

2. சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் இப்படி பள்ளி ஒன்றில தேசிய கீதத்திற்கு வணக்கம் சொல்ல மறுத்த யெஹோவா நம்பிக்கையைப் பின்பற்றும் இரண்டு சிறுமிகளை அந்தப் பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது.

 சிறுமிகள்  நீதிமன்றத்தை அணுகியபோது கேரள உயர்நீதிமன்றம் மாணவிகள் நீக்கப்பட்டது சரி எனத் தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அப்படி அந்தச் சிறுமிகள் நீக்கப்பட்டது தவறு எனச் சொல்லி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆணையிட்டது. 

அவர்களை வணங்கச் சொல்லி கட்டாயம் செய்ய இயலாது. தவிரவும் அந்தச் சிறுமிகள் எழுந்து நின்றுள்ளனர் வணங்கத்தான் மறுத்துள்ளனர். எழுந்து நின்றது என்பது அவர்கள் அப்படி ஒன்றும் தேசிய கீதத்தை அலட்சியம் செய்யும்  நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என அந்தத் தீர்ப்பில்  சுட்டிக்காட்டப்பட்டது.

3.  இப்படி மும்பையில் நடந்ததை வன்மையாக நான் கண்டித்த போதிலும் எனது சொந்தக் கருத்து ஒன்றையும் இங்கு சொல்ல விரும்புகிறேன். நமது தேசிய கீதம் முற்றிலும் மதச் சார்பற்ற ஒன்று.

 மதச்சார்பின்மைக்காக நின்றவர்களுள் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வங்க மொழியில் எழுதப்பட்ட ஒன்று. இந்தியாவை வணங்கும் சாக்கில் எந்த ஒரு குறிப்பிட்ட மதத் திரு உருக்களும், இந்துக் கடவுளரும் அதில் invoke செய்யப்படவில்லை. 

அதனாலேயே இந்துத்துவவாதிகள் இந்த தேசிய கீதத்தை ஒழித்துவிட்டு இந்துத்துவச் சிந்தனைகளைத் தாங்கிய பக்கிம் சந்திரரின் 'வந்தே மாதரம்' பாடலைத் தேசிய கீதம் ஆக்க வேண்டும் என்கிறார்கள். இந்த வந்தே மாதரம் பாடல் முழுவதிலும் இந்து மத ஆன்மீகக் குறியீடுகள் invoke செய்யப்படும்.தமது நிகழ்ச்சிகளில் அவர்கள் அந்தப் பாடலையே இசைக்கிறார்கள். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நடத்துனர் இடை மறித்து, " இப்படித் தொடர்ந்து நடக்கிறது. அரசாங்கத்திடம் இது தொடர்பாக உறுதியான கொள்கை இல்லை எனலாமா?" என்று கேட்டார்.

நான் சொன்னது: முஸ்லிம்கள் அல்லாவைத் தவிர வெறு எதையும் வணங்குவதில்லை. நாடு, தேசம் இவை உட்பட எல்லாம் அவர்களுக்கு வணக்கத்திற்கு அப்பாற்பட்டவை. இது ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிற வகையில் அந்த நம்பிக்கைக்கு மாறாக யாரையும் கட்டாயப்படுத்துவதோ அவமதிப்பதோ தவறு.

 பா.ஜக அரசுக்கு உறுதியான கொள்கை இல்லை என்பதல்ல. இந்த மாதிரி விஷயங்களில் உறுதியான கொள்கை இல்லாமல் இருப்பதுதான் அவர்கள் கொள்கையே. இந்த அரசியல் சட்டததை ஒழிக்க வேண்டும் என்பார்கள். அப்புறம் அரசியல் சட்டத்தை விட மேலான வேதம் இல்லை என்பார்கள். சிறிது நேரத்தில் அரசியல் சட்டம் திருத்தப்படவே கூடாத புனிதம் அல்ல என்பார்கள். 

நரேந்திர மோடி இப்படிப் பலமாதிரி இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசவில்லையா? அரசியல் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் கலந்து கொண்டு தன் விசுவாசத்தை இரண்டு மாதங்களுக்கு முன் காட்டவில்லையா?

இத்துடன் அந்த நேர்கணல் முடிந்தது. என்னைப் பொருத்த மட்டில் எனக்கு தேசபக்தி கிடையாது. சரியாகச் சொல்வதானால் எனக்கு எந்த பக்தியும் கிடையாது. தந்தை பெரியாரைப் போலவே எனக்கும் எல்லா பக்திகளுமே மூட பக்திகள்தான் .

 ஆனாலும் இப்படிப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது எல்லோரும்  எழுந்து நிற்கும்போது நானும் எழுந்து நிற்பதுண்டு, இது எழுந்து நிற்கும் மற்றவர்களுக்க்கு நான் அளிக்கும் மரியாதை. அவ்வளவே. தந்தை பெரியார் கடவுள் வணக்கம் பாடும்போது எல்லோரோடும் எழுந்து நிற்பாரே அப்படி.

ஆனால் அப்படி எழுந்து  நிற்கும்போது கூட எல்லோருடனும் சேர்ந்து தேசிய கீதத்தைப் பாடுவதில்லை.

மார்க்ஸ் அந்தோனி சாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...