சனி, 5 டிசம்பர், 2015

சென்னையில் ஒரு மெழுகுவர்த்தி ரூ.60–க்கு விற்பனை: கத்திரிக்காய் கிலோ ரூ.120

சென்னையில் இனி மழை அளவு குறைந்து விடும் என்று வானிலை இலாகா கூறி  வருகின்ற போதிலும் மக்களிடம்  நம்பிக்கை  ஏற்படவில்லை.


வரும் நாட்களிலும் பலத்த மழை பெய்து விட்டால் என்ன செய்வது என்ற அச்ச உணர்வு மக்களிடம் நிலவுகிறது.

கடந்த 5 நாட்களாக வீடுகளில் முடங்க நேரிட்டதாலும், உடமைகளை இழந்ததாலும் பெரும் பாலனவர்கள் அத்தியாவசியப் பொருட்களை போட்டி போட்டு வாங்கினார்கள். இப்போதைக்கு தேவை இல்லா விட்டாலும் கூட, ‘இருப்பு வைத்து கொள்ளலாம்’ என்ற மனப்பான்மையுடன் பலரும் பொருட்களை  வாங்கி  சென்றனர்.

இதற்கிடையே அத்தியாவசியப் பொருட்களின் வரத்தும் மிக, மிக குறைந்து போனது. இதன் காரணமாக பால், குடிநீர், காய்கறிகள், ரொட்டி, பிஸ்கட், பெட்ரோல்  ஆகியவற்றுக்கு  கடும்  தட்டுப்பாடு  நிலவுகிறது.

மின்சாரம் தடைபட்ட பகுதிகளில் மெழுகுவர்த்தி விற்பனை மின்னல் வேகத்தில் நடந்தன. மெழுகு வர்த்திக்கு அதிக தேவை உருவாகி இருப்பதை உணர்ந்த  வியாபாரிகள்  அதன்  விலையை  பல மடங்கு  உயர்த்தி  விட்டனர்.

முகப்பேரில்  ஒரு  கடையில்  ஒரு  பெரிய மெழுகுவர்த்தி ரூ. 60–க்கு விற்பனை செய்யப்பட்டது.  சென்னையின் பிற பகுதிகளில் ஒரு மெழுகுவர்த்தி ரூ. 30–க்கு விற்கப்பட்டது. அதுபோல தீப்பெட்டியையும் வியாபாரிகள்  அதிக  விலைக்கு  விற்றனர்.

பால் ஒரு லிட்டர் ரூ. 100–க்கு விற்ற நிலையில் இன்று பல இடங்களில் தட்டுப்பாடு நீங்கியது. அதுபோல குடிநீர் தட்டுப்பாடும் நீங்கி வருகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்றிரவுக்குள் சரியாகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். சேவைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளும் சரி செய்யப்பட்டு வருகின்றன.  எனவே  பணம்  எடுப்பது  ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்து  விடும்  என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

மெழுகுவர்த்தி, ரொட்டியை முன்எச்சரிக்கையாக வாங்கியது போல காய்கறிகளையும் மக்கள் அதிக அளவு வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக   சென்னையில்   காய்கறிகளின்   விலையும்   உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ தக்காளி இன்று ரூ. 50க்கு விற்கப்பட்டது. வெங்காயம் ரூ. 40, கேரட்,  பீட்டூட் ரூ. 80, பீன்ஸ், அவரை ரூ. 100, உருளைக்கிழங்கு ரூ. 30–க்கும்  விற்கப்பட்டது.

இன்று  காலை  கோயம்பேடு  சந்தையில்  ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 120–க்கு  விற்கப்பட்டது. முருங்கைக்காய் ரூ. 160–க்கு விற்றது.

பாகற்காய் ரூ. 100, கோவக்காய் ரூ. 60, முட்டை கோஸ் ரூ. 40, பச்சை மிளகாய் ரூ. 50, மல்லி,  புதினா  ஒரு கட்டு ரூ. 15–க்கு  விற்பனையானது.

மளிகை கடைகளில் பிஸ்கட், ரொட்டி தவிர ரவா மற்றும் மைதா இரண்டும் அதிக  அளவு  விற்பனையாகி  வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...