சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதேபோல், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் விமான சேவையில் பல மணி நேரம்தாமதம் ஏற்பட்டது. பின்னர், ஓடுபாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியதால், இன்று காலை வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காலையில், மேலும் தண்ணீர் தேங்கி ஓடுபாதையே தெரியாத அளவுக்கு இருந்தது.
இதனையடுத்து அனைத்து விமானங்களும் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பிற விமான நிலையங்களில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், விமான நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே, சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுவதாக இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக