பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் 2–வது தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜிலானி. இவரது 2–வது மகன் முகமது நியாஸ் (13). 6–ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 19–ந் தேதி பள்ளி விடுமுறை என்பதால் முகமது நியாஸ் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தான். திடீர் என அவன் மாயமானான். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் முகமது ஜிலானி போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகமது ஜிலானிக்கு ஒரு டெலிபோன் வந்தது. அதில் பேசியவன், ‘‘உங்கள் மகனை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்குவீர்களா? என கேட்டனர்.
அதற்கு முகமது ஜிலானி ஒப்புக்கொண்டார். ரூ.3 ஆயிரம் பணத்துடன் ஜெமினி மேம்பாலம் அருகே வரும்படி கூறினான். அதன்படி முகமது ஜிலானி அங்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை.
மீண்டும் போனில் பேசிய மர்ம நபர் ரூ.50 ஆயிரத்துடன் எக்ஸ்பிரஸ் அவென்யூ வரும்படி கூறினார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகமது ஜிலானி அலைக்கழிக்கப்பட்டார். ஆனால் அந்த மர்ம நபர் வரவேயில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த முகமது ஜிலானி பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் தெய்வ சிகாமணி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் காசியப்பன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மர்ம நபர் உசிலம்பட்டியில் இருந்து பேசியது தெரிய வந்தது. இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
இதற்கிடையே முகமது ஜிலானி நண்பர் கலீல் மாணவன் முகமது நியாஸ் மாயமான தகவலை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்தார்.
இந்த தகவல் பரவியது. இதன் மூலம் முகமது ரியாஸ் அயனாவரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது. விளையாடிக் கொண்டிருந்த மாணவன் வழிதவறி இரவில் வெகுதூரம் சென்றுவிட்டான். இதைப் பார்த்த வாட்ச்மேன் அவனை விசாரித்தார். ஆனால் சரியான தகவல் தெரிவிக்காததால் ஆசிரமத்தில் ஒப்படைத்தார்.
ஆசிரமத்தில் இருந்து மாணவனை போலீசார் மீட்டனர். பணம் கேட்டு மிரட்டிய கும்பல் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக