நீதித்துறையை அவதூறாக பேசியதால், கவிஞர் வைரமுத்து மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில், சினிமா பைனான்சியர் போத்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மறைந்த முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் பிறந்தநாள் விழா மற்றும் தபால் தலை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள், கடந்த செப்டம்பர் 12-ந்தேதி தியாகராயநகர் வித்யோதயா அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசினார்.
வைரமுத்து பேசும்போது, “இறைவன் ராமர் போன்ற நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் எல்லாம் நெருப்பு போன்றவர்கள். நெருப்பாக வாழ்ந்தனர். அவர்களைப் பற்றி ஏதாவது பேசினால் நாக்கு எரிந்துவிடும். அவர்கள், ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்புவரை அப்படி இருந்தனர்.
அந்த நேர்மையை கடைசி 6 மாதங்களில் விற்றுவிட்டால் நாட்டின் நிலை என்னவாகும்? எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கான நம்பிக்கையை உருவாக்கிவிட்டு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தவறுகளைச் செய்தால் என்ன செய்வது? சமுதாயத்தால் நீதித்துறை கவனிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார்.
நீதித்துறையைப் பற்றி வைரமுத்து இவ்வாறு கேலி பேசியது நீதிபதிகள் மீது குறிப்பாக ஓய்வுபெறும் நிலையில் உள்ள நீதிபதிகள் மீது மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை உருவாக்கிவிட்டது. ஓய்வுபெறும் நிலையில் எல்லா நீதிபதிகளுமே ஊழல் செய்கின்றனர் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது.
மக்களால் நீதிபதிகள், கடவுளாக போற்றப்படுகின்றனர். ஆனால் இதுபோன்ற பேச்சுகளால் அவர்கள் மீதான நல்லெண்ணம் சிதைந்துவிடுகிறது. இப்படி எல்லாருமே பேசுவதற்கு அனுமதித்தால் நீதிபதிகளின் மாண்பு சிதைக்கப்பட்டுவிடும்.
எனவே, வைரமுத்து மீது கோர்ட்டு தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்காக பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக