வியாழன், 15 அக்டோபர், 2015

பட்டினியை விரட்ட சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி!

தெருவில் வசிப்போர் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடு அடங்கிவிடுவோம். 


ஆனால் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சினேகா மோகன்தாஸ்,  இந்தச் சிந்தனையோடு நிற்காமல் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினால் என்ன... அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன? என்று தீவிரமாகச் சிந்தித்து தொடங்கியதுதான் இந்த உணவு வங்கி.

 23 வயதே நிரம்பிய  சினேகா, விஸ்காம் பட்டதாரி.சமூக அக்கறையும் பின்தங்கி உள்ளவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற இயல்பான ஆர்வமும் கொண்டவர். அதன் மூலம் கிடைத்த ஊக்கம் இன்று உணவு வங்கி தொடங்கி பல நூறு பேரின் வயிற்றுப் பசியை ஆற்றி வருகிறார்.

இந்த உணவு வங்கி எவ்வாறு செயல்படுகிறது? அதை சினேகாவின் வார்த்தைகள் மூலமாகவே கேட்போம்...   

 " இன்றும் பல பேர் 3 வேளை உணவுக்கு வழியின்றி துன்பப்பட்டு வருகிறார்கள். சென்னையிலும் அது எளிதாக காணக்கிடைக்க  கூடிய காட்சியாகத்தான் இருக்கிறது. இது எனது மனதில் பெரும் சுமையை ஏற்படுத்தியது.

 இதை மாற்ற என்ன வழி என்று யோசித்தபோது தோன்றியதுதான் 'உணவு வங்கி'. இதன் செயல் திட்டம் மிக எளிமையானது. இந்த வங்கி,  குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்களது வீடுகளில் இருப்போருக்கு சமைக்கையில் கொஞ்சம் கூடுதலாக சமைத்துவிடவேண்டும். 

பின்னர் என்னை ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் மூலம்  தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தால் போதும். உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை பாக்கெட் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு  வழங்கி அவர்களின் பசியைப் போக்குவார்கள்" என்கிறார் சினேகா.   

தியாகராய நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 55 பாக்கெட் உணவுகள் சினேகாவின் உணவு வங்கி மூலம் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. இவரின் இந்த முயற்சிக்கு சினேகாவின் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும்  ஊக்கம் அளித்து உதவி வருகின்றனர். வங்கி ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே ஃபேஸ்புக் மூலம்  2895 நண்பர்கள் உணவு வங்கியில் இணைந்துள்ளனர்.

"சென்னையில்  தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெரம்பூர், கீழ்ப்பாக்கம், அசோக் நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில்  உணவு வங்கியின் ஆர்வலர்கள் தங்களின் உணவு சேவையை வழங்கி வருகிறார்கள். தற்போது சென்னை முழுக்க  நாள் ஒன்றுக்கு 1200  உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் சாலைகளில் வசிப்போர் யாரும்  3 வேளை உணவின்றி வாடும் நிலை இல்லாமல், உணவுண்டு  வயிறு நிறைந்து,  பட்டினியை வென்ற மனிதர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எனது கனவு" என்கிறார் சினேகா மோகன்தாஸ்.

அவரின் கனவு வெல்லட்டும்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...