வியாழன், 15 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை அதிமுக பேரூராட்சி தலைவர் மீது சமூக ஆர்வலர் புகார்: கொலை மிரட்டல் விடுத்தாரா என போலீஸ் விசாரணை.


முத்துப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் பேரூராட்சிக்கு சொந்தமான பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று  சென்னை உயிர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி பேரூராட்சி நிர்வாகம் மற்றும மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பிருந்தார். 


அதன்படி செக்கடிக்குளத்தில் உள்ள 40 ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் வகையில் சமீபத்தில் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள இறுதி நோட்டீஸ் அனுப்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் குளத்தில் ஆக்கிரக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று காலை சமூக ஆர்வலர்கள் முகம்மது மாலிக் வீட்டிற்கு கூட்டமாக சென்று அங்கிருந்த முகம்மது மாலிக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

 மேலும் வந்திருந்தவர்கள் அ.தி.மு.க மாவட்ட அவைத் தலைவரும், பேரூராட்சி தலைவருமான அருணாச்சலம் தான்  தங்களை அனுப்பியதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மும்மது மாலிக் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் முத்துப்பேட்டை இமாம் அபூஹனீபா தெருவில் (அகாஷ் தோட்ட வளாகம்) உள்ள எனது சகோதரர் வீட்டில் தற்காலிகமாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏராளமான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து உப்பு நீராக மாறி வருகிறது.

 எனவே நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக மேன்மைமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதி பேராணை  எண்: 949 ஃ 2014 தாக்கல் செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு பின் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டறைக்குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

 நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி செக்கடி  குளம் மற்றும் செக்கடி ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 29.01.2015 அன்று பேரூராட்சி நிர்வாகத்துக்கும், வட்டாட்சியருக்கும் புகார் மனு அளித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக பேரூராட்சி நிர்வாகம் கடந்த 05.10.2015 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள இறுதி அறிவிப்பு நோட்டீஸ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. 

இந்நிலையில் இன்று 13.10.2015 காலை 7.30 மணியளவில் நான் வசித்து வரும் இமாம் அபூஹனீபா தெருவில் உள்ள எனது வீட்டிற்கு    1. ஆமினா அம்மாள், 2. அழகர், 3. ராஜலிங்கம், 4. ஒலி முகம்மது மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத செக்கடி ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் எனது வீட்டின் கதவை தட்டினார்கள்.

 நான் வெளியில் வந்து என்னவென்று கேட்டபோது என்னை மிரட்டும் தொனியில் உனது பெயர் என்ன என்று கேட்டார்கள். எனது பெயரை கூறியவுடன் எதற்காக எங்கள் வீடுகளை இடிக்க புகார் அளித்தாய், எங்களுக்கு கால அவகாசம் வேண்டும், நீதான் அதிகாரிகளிடமும், பேரூராட்சியிடமும் சொல்ல வேண்டும் என்று மிரட்டினார்கள். 

இங்கு எதற்காக வந்தீர்கள், உங்களை யார் இங்கு வரச்சொன்னது என்று நான் கேட்டதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோ. அருணாச்சலம் தான் இங்கு வரச்சொன்னார் என்று சொல்லி என்னிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசி சத்தமிட்டனர்.

 இதனால் நான் என் வீட்டு கதவை தாழிட்டு வீட்டு உள்ளே வந்த பிறகும் வீட்டு வாசலில் நின்று கொண்டு சத்தம் போட்டு ஊரை திருத்துவதற்கு நீ என்ன மகானா, ஒழுங்கு மரியதையாக வாயை பொத்திக்கிட்டு வீட்டிலேயே கிட என்றும், காம குரோத வார்த்தைகளால் பேசியும், உன்னை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம் என்று சத்தம் போட்டார்கள்.

 அவர்கள் அதிகளவில் இருந்த காரணத்தால் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. உடனடியாக நான் காவல் துறை அதிகாரிகளுக்கு கைப்பேசி மூலம் தகவல் கொடுத்ததை தெரிந்து கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர். அப்பொழுது வந்திருந்தவர்கள் விரைவில் உன் சாவு எங்கள் கையால்தான் நடக்கும் என்று மிரட்டி விட்டு சென்றார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளேன். 

மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்களை தூண்டிவிட்டு என் வீட்டிற்கு வரச்செய்த அ.இ.அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவரும், பேரூராட்சிமன்ற தலைவர் கோ. அருணாச்சலம் அவர்கள் மீதும், மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனது உயிர்க்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குமாறும்,

செக்கடி குளம் மற்றும் செக்கடி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட உள்ளதால் ஆக்கிரமிப்பாளர்களின் என் மீதான கோபம் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், குளத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் எனது வீடு இருப்பதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். மேலும் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் டி.எஸ்.பி. மற்றும் எஸ்.பி. ஆகியோருக்கு புகார் மனுவை அனுப்பி உள்ளார். இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவரும், பேரூராட்சிமன்ற தலைவருமான அருணாச்சலம் மீது கொடுக்கப்பட்ட இந்த புகாரால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பகத்சிங்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...