1950க்குப் பிறகு
தமிழ்நாட்டில் அனேக வீடுகளில் ரேடியோ
வாங்கி பாட்டுக் கேட்கும் ஆவலைத் தூண்டி விட்டது
இலங்கை வானொலி நிலையம்தான்.
அந்தக்
காலகட்டத்தில் பொழுதுப்போக்கு சாதனம் என்று வேறு
எதுவும் கிடையாது. பணக்கார வீடுகளில் பத்தாயம்
போன்ற பெரிய பெரிய ரேடியோ
இருக்கும். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு
ரேடியோக்களும் அடங்கும்.
எங்க வீட்டுக்கு எங்க வாப்பா 1955ல் மலேசியாவில் இருந்து
பிலிப்ஸ் ரேடியோ பெட்டி கொண்டு
வந்தார்கள். அதற்காக பெரிய அலமாரி
செய்து அதிலே ரேடியோ பெட்டியை வைத்து இருப்பார்கள்.
இந்த வால்வு ரேடியோ உயரத்தில் ஏரியல் கட்டி இணைப்பு
கொடுத்தால்தான் ஸ்டேஷன்கள் எடுக்கும். அதனால் ரேடியோ உள்ள
வீடுகளில் காற்றுப் பந்தல் மேலும், ஓட்டு வீட்டிற்கு மேலும் உயரமான கம்புகளில் ஏரியல் செட்டப் செய்து இருப்பார்கள் .
சதுரமாக, செவ்வகமாக, வட்டமாக, நட்சத்திர வடிவங்களாக, அவரவர் விரும்பும் டிசைன்களில்
சட்டங்களை அடித்து அதில் பேட்டுக்கு
நரம்பு இழுத்துக் கட்டுவதுப் போல் செம்புக் கம்பிகளைப் பின்னி ஏரியல் தயார்
செய்துக் கட்டப்பட்டிருக்கும்.
on செய்து ஐந்து நிமிடங்கள்
கழித்து பச்சை நிற பட்டர்பிளை
லைட் எரியத் தொடங்கிய பிறகு
தான் ஸ்டேஷன் சிக்னல் கிடைக்கும். அதன் பின்னர் டியுனிங் செய்து விரும்பும் ஸ்டேஷன்களை வைத்துக் கொள்ளலாம் .
அந்தக் காலத்தில் குறைந்த
அழுத்த மின்சாரம் தான் இருக்கும். அதனால்
மாலை ஆறு மணி ஆகிவிட்டால்
பாடிக்கொண்டிருக்கும் ரேடியோ கொஞ்ச கொஞசமாக
சவுண்டுக் குறைந்து ஊமையாகி விடும் ..
தமிழ்நாட்டில்
பல ஊர்களில் ரேடியோ ஸ்டேஷன் இருந்தாலும்
எங்கள் பகுதியில் திருச்சி, மெட்ராஸ், பாண்டிச்சேரி நிலைய ஒலிபரப்புதான் கிடைக்கும். அவற்றில் குறிப்பிட்ட சில நேரங்களில் தான்
பாட்டுப் போடுவார்கள்..
வானொலி நேயர்களை கவர்ந்தது என்றால் அது இலங்கை ஒலிபரப்பு
கூட்டு ஸ்தாபனம்தான்.. இன்று டிவியில் பார்க்கின்ற
பற்பல நிகழ்ச்சிகளுக்கு தாயாக விளங்கியது இலங்கை
வானொலிதான்.
அதில் ஒலியாக வந்த
நிகழ்ச்சிகள் டிவியில் ஒளியும் ஒலியாக பார்த்து
கொண்டிருக்கிறோம்.. இலங்கை வானொலி ஒலிப்பரப்பிய
விளம்பரங்கள், பாட்டுக்கள் , இசையும் கதையும், பாட்டுக்கு
பாட்டு, வார்த்தை விளையாட்டு , இப்படியாக எல்லா நிகழ்ச்சிகளும் மக்களை
ஈர்த்தன.
அறிப்பாளர்களான KS ராஜா, PH அப்துல் ஹமீது, மயில்வாகனன் , இன்னும் சிலரின் நிகழ்ச்சி
தொகுப்புகள் அருமையாய் இனிக்கும்... இதில் கேட்ட விளம்பரங்களையும், பாடல்களையும் மறக்க முடியமா!!
காலை ஆறு மணிக்கு தொடங்கி இரவு
பத்து மணி வரை நிகழ்ச்சிகள் நீடிக்கும்.. பள்ளி விடுமுறை நாட்களில்
எப்படா பொழுது விடியும் என்று
காத்திருப்போம்.. அந்நாளையில் ரேடியோ பாடும் போது
எல்லோரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள் ..
என்னடா இது ஆளே
இல்லாமல் பேசுது ,பாடுது என
மூக்கில் விரலை வைப்பார்கள் ..அறிவியலின்
புதிய வரவு அதனால் புதிய
பார்வை..பழைய டிவி அளவில்
வந்த ரேடியோ அறிவியல் வளர்ச்சியால்
பாக்கெட் ரேடியோவாக வந்தது..
அதன் பிறகுள்ள
அறிவியல் வளர்ச்சியின் ஆசூர வேகம் நீங்கள்
அறிவீர்கள்.. இல்லங்கள், ஹோட்டல்கள், சிறு தொழில் கூடங்கள், கைத்தொழில் இடங்கள், மற்றும் எல்லா இடங்களிலும்
ரேடியோவின் தேவை வியாபித்து இருந்தது
..
பொழுதுப் போக்க துணைப் புரிந்தது
..வருடா வருடம் ரேடியோவுக்கு லைசென்ஸ்
பணம் கட்ட வேண்டும் ..என்ன
இருந்தாலும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சி
ஒலிப்பரப்பு திறனை மனதார பாராட்டிதான்
ஆக வேண்டும் ..
இந்த நவீன காலத்தில்
பலநூறு பொழுதுப்போக்குகள் இருந்தாலும் அந்த பழைய ரேடியோவை மறக்கவே முடியவில்லை ....
கவிஞர்
நாகூர் காதர்ஒலி..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக