சனி, 17 அக்டோபர், 2015

மும்பை ஓட்டல்களில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நடைபாதையில் உறங்கிய பாகிஸ்தானிய குடும்பம்.


மும்பை ஓட்டல்களில் பாகிஸ்தான் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரெயில் நிலைய நடைபாதையில்  படுத்துறங்கிய  தகவல்  வெளியாகியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து சூர்யநகரி எக்ஸ்பிரஸ் மூலம் கடந்த புதன்கிழமை அவர்கள் மும்பை வந்தனர்.

 இந்த குடும்பத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். தங்களுடைய குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அங்குள்ள ஹாஜி அலி தர்காவில் அவனுக்காக பிரார்த்தனை செய்து விட்டு, பின்னர் மும்பையை சுற்றி பார்க்க அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி, தர்காவில் பிரார்த்தனை முடிந்ததும் இரவில் தங்குவதற்காக மும்பை சென்டிரல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு அறை வழங்க ஓட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. வெளிநாட்டில் இருந்து வந்து ஓட்டல்களில் தங்குபவர்கள், ‘விண்ணப்பம்–சி’-யை பூர்த்திசெய்து தர வேண்டும். அந்த விண்ணப்பப் படிவம் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.

ஆனால், இதனை நிரப்பிக் கொடுக்க அந்த குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத காரணத்தால், அவர்களுக்கு ஓட்டலில் அனுமதி மறுக்கப்பட்டதாக ஓட்டல் நிர்வாகம் கூறியது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் மற்ற ஓட்டல்களுக்கு சென்றனர். அங்கேயும் இவ்வாறு கூறவே, கலக்கம் அடைந்த அவர்கள், நடு ரோட்டில் செய்வதறியாது திகைத்தனர். தகவல் அறிந்த மும்பை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் மகேஷ் சவுகான் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் விசாரித்தார்.

அவர்களுடைய சான்றிதழ்கள், விசா ஆகியவற்றை சோதனை செய்த பின்னர், அந்த குடும்பத்தினரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று ஆதரவு கொடுத்தார். மேலும், காபி மற்றும் உணவு வகைகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் சற்று இளைப்பாறிய அக்குடும்பத்தினர், நள்ளிரவு 1.30 மணி வரை அங்கிருந்தனர். 

அதன்பின்னர், அங்கிருந்து கிளம்பி மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலைய நடைபாதையில் சிறிது நேரம் படுத்து தூங்கினர். இதனைத்தொடர்ந்து, காலையில் லோக்சத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடித்து ஏமாற்றத்துடன் ஜோத்பூர் திரும்பினர்.

இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, ஓட்டல் நிர்வாகம் தங்களுக்கு அனுமதி மறுத்தது பற்றி அக்குடும்ப உறுப்பினர் நூர்பானு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்துக்காக நாங்கள் மும்பை மக்களையோ, போலீசாரையோ பழி சொல்லப் போவதில்லை.

 சமீபத்தில், நடிகர் சல்மான்கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படம் பார்த்து மிகவும் பரவசப்பட்டோம். எனவே அவரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்கவும் நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள் இப்படி ஆகிவிட்டது. ஒன்றிரண்டு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானியர்களையும் தவறாக எடை போடாதீர்கள்’’ என்றார்.

இந்த சம்பவம் பற்றி சப்–இன்ஸ்பெக்டர் மகேஷ் சவுகான் கூறும்போது, ‘‘அந்த குடும்பத்தினர் ஹாஜி அலி தர்காவில் பிரார்த்தனை செய்து முடித்ததும், மும்பையை சுற்றிப் பார்த்துவிட்டு 18–ந் தேதி (நாளை) தான் ஜோத்பூர் திரும்புவதாக இருந்தது. ஆனால், சில அசவுகரியம் காரணமாக ஏற்கனவே ரிசர்வ் செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு முன்கூட்டியே சென்றுவிட்டனர்’’ என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...