செவ்வாய், 17 நவம்பர், 2015

திருத்தணி அருகே வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது: 5 பேர் மீட்பு–ஒருவர் மாயம்.



ஆவடியை  சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் மகன் யஷ்வந்த் (வயது 4) மற்றும் உறவினர்கள் கோதண்டபாணி (70), ஈஸ்வரம்மா, மனோகரன், முனுசாமி ஆகியோருடன் இன்று காலை ஆந்திர மாநிலம் நல்லாத்தூரில் இருந்து திருத்தணி  கோவிலுக்கு  சென்றார்.


பலத்த மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் திருத்தணி அருகே உள்ள என்.என்.கண்டிகை – நெமிலி இடையேயான  தரைப்பாலம்  தண்ணீரில்  மூழ்கி உள்ளது.

இந்த நிலையில் கஜேந்திரன் குடும்பத்துடன் வந்த கார் தரைப்பாலத்தில் ஒரு பஸ்சின்  பின்னால்  சென்றது. அப்போது திடீரென பஸ் நின்றதாக தெரிகிறது.

இதில் கார் மெதுவாக சென்றதால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

உடனே கிராம மக்கள் சுமார் 15–க்கும் மேற்பட்டோர் ஆற்று வெள்ளத்தில் குதித்து  காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் வேகமாக இழுத்து செல்லப்பட்டது.

இதையடுத்து காரின் கண்ணாடியை உடைத்து கஜேந்திரன், அவரது மகன் யஷ்வந்த், மனோகரன், ஈஸ்வரம்மா, முனுசாமி ஆகிய 5 பேரை மீட்டனர்.

கோதண்டபாணியை மீட்பதற்குள் கார் வேகமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. அவர் காருடன் தண்ணீரில் மூழ்கி விட்டார். மீட்கப்பட்ட 5 பேரையும் கிராம மக்கள் கரைக்கு அழைத்து வந்தனர். இதில் சிறுவன் யஷ்வந்த்  அதிகளவு  தண்ணீர்  குடித்ததால் மயக்கம் அடைந்தான். அவனுக்கு உடனடியாக 108 ஆம்புலன்சில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 பேரும் நலமாக உள்ளனர்.

காருடன் இழுத்து செல்லப்பட்ட கோதண்டபாணி என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு படையினர் கரையோர கிராம மக்கள் தேடி வருகிறார்கள்.

சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் உடனடியாக போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

கார் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை தண்ணீர் குறைந்த அளவு சென்றதால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...