முத்துப் பேட்டை அடுத்த தில்லை விளாகம் தெற்கு கீழ ஆதிக் குட்டிகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான இடம் அதே பகுதியில் உள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒருவரது சமாதி உள்ள இடத்திற்கு செல்வதற்காக பாதைக்காக இந்த இடத்தை விலைக்கு கேட்டார். பாலசுப்பிரமணியன் தர மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாலசுப்பிரமணியன் மற்றும் அவருக்கு ஆதரவான சண்முகம், பன்னீர் செல்வம் ஆகியோர் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த 3 குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தொடர்பை தவிர்த்து வந்துள்ளனர். இந் நிலையில் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு ஒதுக்கி வைக்கப் பட்ட குடும்பத்தினர் சென்றதாக கூறி ஒரு கும்பல் அரிவாளுடன் கடந்த 10ம் தேதி இரவு பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று கொலை மிரட் டல் விடுத்தனர்.
இது குறித்து 11ம் தேதி பால சுப்பிரமணியன் முத்துப் பேட்டை போலீசில் புகார் அளித்தார். இது குறித்து அறிந்த அந்த கும்பல் நேற்று முன் தினம் பால சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி தமிழரசியை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த தமிழரசி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில்: எங்கள் 3 பேர் குடும்பத்தை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எனது இடத்தை விற்க மறுத்ததற்காக ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர்.
2 வருடமாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து விட்டேன். எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இப்போது எங்களது உயிரையும் எடுக்க தயாராகி விட்டனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக