பெங்களூரு மிஷன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்தவர் ஜோதி உதய் (வயது 40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி எல்.ஐ.சி. ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்மநபர் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை பாதியளவில் அடைத்துவிட்டு துப்பாக்கி மற்றும் அரிவாளை எடுத்து அவரிடம் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர் தான் வைத்திருந்த அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அந்த நபர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை கொள்ளையடித்து சென்றுவிட்டார். மேலும் மர்மநபர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ஜோதி உதய் சுயநினைவை இழந்தார்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். மையத்தில் ஜோதி உதய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் எஸ்.ஜே.பார்க் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிகாரி ஜோதி உதயை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதன் பயனாக படிப்படியாக ஜோதி உடல்நிலை தேறினார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். ஏ.டி.எம். மையத்தில் ஜோதியை மர்மநபர் அரிவாளால் வெட்டிய பதைபதைக்கும் காட்சிகள் அனைத்தும் ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், மர்மநபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களுக்கு சென்று முகாமிட்டு குற்றவாளியை கைது செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் அதில் தோல்வியை கண்டனர். அதிகாரி ஜோதியை தாக்கிய மர்மநபரை பிடிக்க 100-க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குற்றவாளியை அடையாளம் காட்டும் நபருக்கு ஊக்கத்தொகையையும் மாநில அரசு அறிவித்தது. அதுவும் எந்த பயனையும் தற்போது வரை அளிக்கவில்லை.
இந்த நிலையில் அதிகாரி ஜோதி மீது ஏ.டி.எம். மையத்தில் வைத்து மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்றுடன் (வியாழக்கிழமை) 2-வது ஆண்டை தொடுகிறது.
2 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் குற்றவாளியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. அந்த குற்றவாளியை பிடிக்க போலீசாருக்கு சரியான துப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக