வெள்ளி, 20 நவம்பர், 2015

இன்று ரோல்ஸ் ராய்ஸ் காரின் உரிமையாளர்....அன்று சலூன் கடை ஓனர்

பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகை அலங்காரக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, 42-வது வயதில், உலகின் விலை உயர்ந்த கார்களில்  ஒன்றான  ரோல்ஸ்ராய்ஸ்  காரின்  உரிமையாளர் ஆனவர்.


 பெங்களூருவில் இன்னர் ஃபேசஸ் ஹேர் சலூன் மற்றும் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் ஆகிய  நிறுவனங்களை நடத்திவருகிறார்.

“எனக்கு ஏழு வயது இருக்கும்போது, என் அப்பா இறந்துவிட்டார். அவர் நடத்தி வந்த சலூனை என் சித்தப்பா நடத்த ஆரம்பித்தார். அதற்காக தினமும் எங்களுக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவந்தார். 

வீட்டில் நான், தம்பி, தங்கை, அம்மா, பாட்டி ஆகிய ஐந்து பேர். அம்மா வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். படிப்பு, சாப்பாடு என தேவைகள் கழுத்தை நெறிக்கவே, என்னுடைய 12 வயதில், பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, நானும் சின்னச் சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். 

10-ம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து முழு நேரமாகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால், படிப்பை பகுதி நேரம் ஆக்கிக்கொண்டு, முழு நேரமாக சலூனை எடுத்து நடத்த ஆரம்பித்தேன். ப்ளஸ் டூ முடித்த பிறகு, பகுதி நேரமாக டிப்ளமோ சேர்ந்தேன். ஆனால், வேலைப் பளு காரணமாக அதைப் பாதியிலேயே கைவிட நேர்ந்தது.

அளவான வருமானம் தரும் தொழிலாகத்தான் சலூன் இருந்தது. சில ஆண்டுகளுக்குப்  பிறகு,  எந்த இளைஞனுக்கும் ஏற்படும் கார் ஆசை எனக்கும் வந்தது. 

என்  தாத்தா  கடன் மூலம் ஒரு மாருதி ஆம்னி வாங்கிக் கொடுத்தார். கொஞ்ச நாட்களிலேயே காருக்கான தவணை செலுத்த முடியாமல் திணறினேன். அப்போது, என் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த வீட்டு  முதலாளி  நந்தினி அக்கா, காரை வாடகைக்கு விடலாம் என யோசனை சொல்லி, அவர் வேலை செய்த நிறுவனத்திலேயே கான்ட்ராக்ட்டும்  வாங்கிக்கொடுத்தார்.

அந்த  நிறுவனம் வளர வளர, நானும் வளர்ந்தேன். 1994-ல் ஒரு காருடன் இந்தத்  தொழிலில்  நுழைந்தேன். 1996-ல் எனக்குத் திருமணம் ஆனபோது, ஆறு கார்கள்  ஆகியிருந்தன.  இப்போது  நான்  209 கார்களின் உரிமையாளன்.

மற்ற  நிறுவனங்கள் போல நாமும் காரை வாடகைக்கு விடுகிறோம்; ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமே என யோசித்து, யாரும் வாடகைக்கு விடாத கார்களாக விட நினைத்தேன்.

 2004-ல்  புதிய பென்ஸ் காரை வாங்கி வாடகைக்கு விட்டேன். அதுவரை இங்கு, புதிய பென்ஸ் காரை யாரும் வாடகைக்கு விட்டது இல்லை. நல்ல வரவேற்பு கிடைக்கவே, 2009-ல் பிஎம்டபிள்யூ, ஆடி கார்களையும்  வாங்கினேன்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை வாடகைக்கு விடலாம் என்கிற எண்ணம் 2011-ல் ஏற்பட்டது. நான் ரோல்ஸ்ராய்ஸ் வாங்கும்போது, பெங்களூருவில் ஐந்து பேரிடம்  மட்டுமே  அந்த கார் இருந்தது.

 என் வளர்ச்சி வெறும் அதிர்ஷ்டம் என நான் நம்பவில்லை. கடின உழைப்பு இல்லை  என்றால், எந்த அதிர்ஷ்டம் அடித்தாலும் ஒரு உபயோகமும் இல்லை” என்று சொல்லும் ரமேஷ்பாபு, இன்னும் சலூன் கடையையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.   நம்பிக்கை மனிதர்!

படங்கள்: ர.ராகேஷ்குமார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...