வெள்ளி, 6 நவம்பர், 2015

துபையில் முடங்கிக்கிடக்கும் சிவகங்கை தொழிலாளி: மனைவி, 4 குழந்தைகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு...


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி குடும்பம், நாடு திரும்ப வழியின்றி  துபையில்  முடங்கிக்  கிடப்பதாகப்  புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம்,  காளையார் கோவிலைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (39). இவரது மனைவி பிரான்மலையைச் சேர்ந்த கவிதா (37). இவர்களுக்கு இஷிதா (9 ),  ஷிரியா (7)  ஆகிய  2 பெண் குழந்தைகளும், காளீஸ் (5), நமீத் (3) என 2 ஆண்   குழந்தைகளும்   உள்ளனர்.


கார்த்திகேயன் 2005-ம் ஆண்டில் இருந்து, துபையில் பணியாற்றி வருகிறார். இவர் துபையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கவிருந்தார். இந்நிறுவனம் மூலம் தொழிலாளர்களை எடுத்து மற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக,  துபை  அரசின்  அனுமதி  பெற  அந்நாட்டு லைசென்ஸ் ஹோல்டர்  பிஆர்ஓ வான  புதுக்கோட்டை  நபரை  அணுகியுள்ளனர்.

மற்றொரு  நிறுவனத்தில் வேலை பார்த்த மனைவி கவிதா, ரூ.40 லட்சம் வரை வங்கிக்  கடன்  பெற்று  கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட அந்த  நபர் உரிய அனுமதியை பெற்றுத் தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

 இதனால், வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் அவர்கள் துபையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடனை செலுத்தாததால் வழக்கு பதிந்து கவிதாவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடனையும் அடைக்கமுடியாமல் இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல் தவிக்கிறது அந்த குடும்பம். பல மாதங்களாக சரியான உணவின்றி  பசி,  பட்டினியோடு  குழந்தைகளுடன்  தவிக்கின்றனர்.

இதுகுறித்து, ‘தி இந்து’ விடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திகேயனின்  மனைவி  கவிதா  கூறியதாவது:  புதுக்கோட்டை  நபர் ரூ. 40 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு, உரிமத்தை பெற்றுத் தராமல் ஏமாற்றி வருகிறார். 

பணம் அனைத்தும் முடங்கி  உள்ளதாலும்,  நாங்கள்  வேலையின்றி  உள்ளதாலும்  சிரமப்படுகிறோம். எனது 2 குழந்தைகள் வீட்டில்தான் பிறந்தனர். கடைசி குழந்தை பிறந்த பின்னும் மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல்  உள்ளோம்.

இதெல்லாம்  அந்த புதுக் கோட்டை நபருக்கு தெரிந்தும், எங்களது பணத்தை தர மறுக்கிறார். மேலும், அவரிடம் கொடுத்த லைசென்ஸை ரத்துசெய்து தருமாறு கேட்டும் செவிசாய்க்க மறுக்கிறார். வங்கியில் வாங்கிய கடனை அடைத்தால்தான் துபையில் இருந்து இந்தியா திரும்ப முடியும். இதனால், 7 ஆண்டுகளாக இந்தியா வரமுடியாமல் தவிக்கிறோம்.

 எங்களது  உறவினர்களும் எங்களோடு பேசி 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாங்கள்  இருக்கும் நிலைமை அவர்களுக்குத் தெரியாது. பல மாதங்கள் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே  வழியின்றி பரிதவிக்கிறோம். எங்களின் நிலை அறிந்து உதவிடுமாறும், எங்களை உயிருடன் மீட்குமாறும் பிரதமர் நரேந்திரமோடிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

புதுக்கோட்டை நபர் எங்களுக்கு உதவி செய்ய வருவோரிடம் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். அந்த நபரின் மிரட்டல், கொடுமையில் இருந்தும் மீட்க வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கண்ணீர்  மல்கக்  கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...