ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதல் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் - ஒஸ்லோ - துணை நகர முதல்வர் (Vice Mayor) பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.
பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோ ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி (வேறிரு கட்சிகளுடன் இணைந்து) கைப்பற்றியுள்ளது. இதுபற்றி முன்பே பதிவிட்டிருக்க வேண்டும். தாமதம், இந்த நல்ல செய்தியைச் சேர்த்துப் பதிவிட வைத்துள்ளது.
பல்வேறு "புகழ்பெற்ற" தொழில்களை எமது இரண்டாம் தலைமுறையினர் (உண்மையில் பெற்றோர்கள்) தேடிக் கொண்டிருக்கையில் அரசியலைத் தனது முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட கம்சாயினி ஒஸ்லோ தொழிற்கட்சியின் துணைத் தலைவராக இளம் வயதிலேயே தெரிவானவர்.
இளைஞரணியில் தலைவராக இருந்து, கட்சியின் ஒஸ்லோ துணைத் தலைவராகப் பெரும் ஆதரவோடு தெரிவானவர். ஒப்பீட்டளவில் எம்மவர்கள் - குறிப்பாகப் பெண்கள் - அரசியலில் ஈடுபடுவது நோர்வேயைப் பொறுத்தவரை மிகக் குறைவு.
பாகிஸ்தானியப் பின்னணி கொண்ட பெண்கள் பலர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, ஒருவர் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தாய்நாட்டை நோக்கிய அரசியற் செயற்பாட்டில் இருந்த ஈடுபாடு, எம்மிற் பலருக்கு இந்த நாட்டின் தேசிய அரசியலில் இருக்கவில்லை என்பதே உண்மை.
இரண்டிலும் சரியான அக்கறையோடு பங்கேற்று இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் கம்சாயினி. ஒஸ்லோவில் மூன்றாம் இடத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அவர் வென்றார் என்பது அவரது உழைப்புக்கு வாக்காளர்கள் கொடுத்த பரிசன்றி வேறென்ன?
பாரம்பரியமாகத் தமிழர்கள் தெரிவு செய்யும் கல்வி - தொழிலைத் தெரிவு செய்யாமல், அரசியலில் முன்னோடியாக வர அவரை ஊக்குவித்த பெற்றோருக்கும், அடிக்கும் அலையோடு அள்ளுண்டு போகாமல், இந்தத் துறையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி சூடியுள்ள கம்சாயினிக்கும் மனம் நிறைய வாழ்த்துகள்!!!
தகவல்..தியாகராஜன் விஜயேந்திரன். ஒஸ்லோ.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக