சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு டைகர் ஏர்வேஸ் விமானம் 153 பயணிகளுடன் நேற்று காலை வந்து கொண்டிருந்தது.
10.30-க்கு தரையிறங்க வேண்டும். அப்போது, திடீரென விமானத்தின் விசிறியில் பறவை ஒன்று புகுந்து இன்ஜினுக்குள் சிக்கிக் கொண்டது. இது விமானத்தில் உள்ள மானிட்டரில் சிக்னல் மூலம் தெரிய வந்தது.
உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு பைலட் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பாக தரையிறக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் விபத்து ஏதும் நடக்காதபடி தீயணைப்பு வாகனம் மற்றும் பாதுகாப்பு கருவிகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சிறிது நேரத்துக்குள் விமானத்தை பைலட் பத்திரமாக தரை இறக்கினார். இதனால் 153 பயணிகளும் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து, பழுது பார்க்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் வர வழைக்கப் பட்டு விமானத்தின் இன்ஜினில் சிக்கியுள்ள பறவையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடு பட்டனர்.
இதையடுத்து திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் 16 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என டைகர் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தகவல் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. இதனால் இங்கிருந்து சிங்கப்பூர் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த 1 குழந்தை உள் பட 154 பயணிகள் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இதே போல் நேற்று முன் தினம் திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானம் புறப்பட இருந்த நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு காரண மாக புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
கோலாலம்பூரில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டனர். தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் கோளாறு சரி செய்யப் படாததால் மலேசியா புறப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக