ஆனந்த விகடன் முகநூலை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தின் மீது தமிழக அரசு யுத்தம் தொடுத்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“பிரபலமான பத்திரிகைகளில் நடுநிலையோடு கருத்துக்களை வெளியிட்டு மக்களின் அபிமானத்தை பெற்றது விகடன் குழும பத்திரிகைகள். அந்த குழுமத்தின் சார்பில் 90 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து அரசியல் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.
நவம்பர் 25 தேதியிட்ட இதழில், ‘மந்திரி தந்திரி’ என்ற தலைப்பில் ‘என்ன செய்தார் ஜெயலலிதா’ என வெளியிடப்பட்ட கட்டுரையில் தமிழக அரசின் நான்கு ஆண்டு கால செயல்பாடு அப்படியே படம் பிடித்துக் காட்டப்பட்டிருந்தது. தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்ளாமல் பழிவாங்கும் படலத்தை தொடங்கியுள்ளது ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு.
இதனைத் தொடர்ந்து ஆனந்த விகடன் பத்திரிகையின் மீதும், அதனை அறிக்கையாக வெளியிட்ட தி.மு.க. தலைவர் கலைஞர் மீதும் அவதூறு வழக்கு தொடுத்துள்ள தமிழக அரசு அடுத்த அதிரடியாக ஆனந்த விகடன் முகநூலையும் முடக்கியுள்ளது. முகவர்களும், விற்பனையாளர்களும் மிரட்டப்பட்டுள்ளனர். விற்பனைப் பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். நெருக்கடி காலம் அமலில் உள்ளதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தையே அ.இ.அ..தி.மு.க.வின் இந்த செயல் ஏற்படுத்துகிறது. இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
ஆனந்த விகடன் பத்திரிகை மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த யுத்தத்தின் மூலம் அதன் 50 லட்சம் வாசகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள் என்பதைவிட 5 கோடிக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் இந்த அரசின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.
கடந்த காலங்களில் பத்திரிகைகளின் மீது இப்படிப்பட்ட தாக்குதலை தொடுத்தவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளை பாடமாக எடுப்பதோடு, பத்திரிகைகளில் வரும் விமர்சனம் என்பது நம் முன் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியாக நினைத்து தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக கருதுவதே அறிவுடைமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக