மிஸ்டுகால் மூலம் அறிமுகமானவரை தேவதையாக எண்ணி காதலை வளர்த்தேன். ஆனால், நேரில் பார்த்தபோது அழகியாக இல்லாததால் இளம் பெண்ணை கொன்றேன் என்று காதலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் டாஸ்கன் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 19ம் தேதி இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவருடன் வசித்த செல்வராஜ் (30) மாயமானார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தேடிவந்தனர். கொலையான பெண் யார் என்பது குறித்து விசாரித்தனர்.
அந்த வீட்டில் இருந்த செல்போன் மெமரிகார்டில் இருந்த பெண்ணின் படத்தை அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் காட்டினர். செல்வராஜுடன் வசித்தது அந்த பெண்தான் அவர்கள் சொன்னதால், இறந்து போன பெண் என்று அந்த போட்டோவை வெளியிட்டனர்.
சில நாட்கள் கழித்து, போலீசை தொடர்பு கொண்ட ஒரு பெண் சார் நான் உயிரோடு இருக்கிறேன். கொலை செய்யப்பட்டதாக ஏன் என் போட்டோவை வெளியிட்டீர்கள் என்று கேட்டார். தவறான படத்தை வெளியிட்டதற்காக அந்த பெண்ணிடம் போலீசார் மன்னிப்பு கேட்டனர்.
கொலையுண்ட பெண் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கரூரில் தனிப்படை போலீசிடம் செல்வராஜ் சிக்கினார். அவரை கோவைக்கு நேற்று அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன. போலீசில் செல்வராஜ் கூறியதாவது:
எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா ஆகும். ஏற்கனவே, ஒரு குழந்தை பெற்று கணவனை பிரிந்த பெண்ணை நான் திருமணம் செய்தேன். சேலம் மேச்சேரி அருகேயுள்ள விருதாசலத்தில் மாமியார் வீட்டில் எனது மனைவி, குழந்தைகள் வசிக்கின்றனர்.
நான் இரண்டரை ஆண்டுக்கு முன் கோவை வந்து பீளமேட்டில் ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்தேன். வாடகை வீடு எடுத்து தனியாக வசிக்கிறேன். கடந்த 8 மாதங்களுக்கு முன் செல்போனில் மிஸ்டுகால் வந்தது. அவர் அரக்கோணத்தை சேர்ந்த சத்யா(25) ஆவார்.
ஆரம்பத்தில் நாங்கள் சகஜமாக பேசினோம். இது, நாளைடைவில் எனக்குள் காதலை வளர்த்தது. அவரது குரல் இனிமையாகயும் இருந்தது. இதனால், அவர் தேவதை போல் பேரழகியாகத்தான் இருப்பார் என்று மனசுக்குள் கற்பனை வளர்த்தேன். எப்படியாவது அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கடந்த 12ம் தேதியன்று சத்யாவை கோவைக்கு வருமாறு கூறினேன். சத்யாவும் கோவைக்கு வந்தார். ஆனால், அவரை பார்த்தவுடன் எனக்குள் இருந்த ஆசையெல்லாம் போய்விட்டது. பேரழியாக இல்லை என்றாலும், அழகியாககூட இல்லை. இதனால், அவரை கைகழுவ எண்ணினேன்.
கோவையில், என்னுடன் 16ம் தேதி வரை 4 நாள் தங்கினார். என் ஆசைதீரும் வரை அவருடன் உல்லாசமாக இருந்தேன். 16ம் தேதியன்று, திருமணம் செய்து கொள்ளுமாறு சத்யா என்னை கட்டாயப்படுத்தினார். இதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கூறி மறுத்தேன்.
அதற்கு சத்யா, ‘’உங்களை நம்பி என்னை தொலைத்துவிட்டேன். இனி வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன்’’ என்று கூறினார். மேலும், நமது உறவு குறித்து, போலீசில் புகார் கொடுப்பேன் என்றார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நான், சத்யாவை அடித்து கீழே தள்ளினேன். பின்னர், கியாஸ் டியூப்பால் கழுத்தை நெரித்து அவரை கொன்றேன்.
பிணத்தை வீட்டுக்குள்ளேயே போட்டுவிட்டு திண்டுக்கல்லுக்கு தப்பினேன். ஆனால், என் வீட்டில் ஒரு மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில், உள்ள ஒரு பெண் போட்டோவை பார்த்து என்னுடன் வசித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போலீசாரும் இறந்த பெண் அவர்தான் என்று வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்த படத்தை ஒரு பெண் பார்த்து தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார். இதனால், சிக்கமாட்டேன் என்று கருதினேன். போலீசார் மோப்பம் பிடித்து என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட சத்யாவின் சொந்த ஊர் தேனி. அரக்கோணத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக