தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த தொடர் மழையின் காரணமாக பல வீடுகள் இடிந்து விட்டன.
வாழை மற்றும் நெற்பயிர்கள், கரும்பு ஆகியவை சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.
தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, பூதலூர், செங்கிப்பட்டி, பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டீஸ்வரம், பந்த நல்லூர், அணைக்கரை ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொடராச்சேரி அருகே உள்ள கொடிமங்கலத்தைச் சேர்ந்த வீரையன் (வயது 70) வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். திருவாரூர், கொடராச்சேரி, நீடாமங்கலம், நன்னிலம், மாங்குடி உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று காலை மழை பெய்து வருகிறது.
நாகை அருகே உள்ள கீச்சாகுப்பத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (65) இவர் தொடர் மழையால் ஏற்பட்ட குளிரை தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு, தென்னாடர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு புதிதாக வீடு கட்டி உள்ளார். இவரது வீட்டில் புதுமனை புகுவிழா இன்று நடைபெறுவதையொட்டி தாணிகோட்டகத்தைச் சேர்ந்த வீரபத்திரன் (60), குணசேகரன் (55) ஆகியோர் சமையல் வேலைக்காக சென்றனர்.
இன்று காலை காற்றுடன் மழை பெய்ததால் சமையல் செய்ய அமைக்கப்பட்டிருந்த கொட்டகை சரிந்தது. அதனை வீரபத்திரனும், குணசேகரனும் சரிசெய்ய முயன்றபோது அங்கு மின்விளக்கு இணைப்புக்கு கொடுக்கப்பட்ட ஒயரில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கியது. இதில் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த குணசேகரனை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.
இதுபற்றி வாய்மேடு இன்ஸ்பெக்டர் சிவதாஸ், சப்–இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான வீரபத்திரனுக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், வீரமணி, சரவணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருக்குவளை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. சீர்காழி நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் இரவு முழுவதும் மழை பெய்தது.
பலத்த மழையின் காரணமாக திருவாரூர், நாகை உட்பட 5 மாவட்டங்களுக்கு 23.11.2015 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு (நாளை) விடுமுறை விடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக