டெல்லியில் ரூ.22 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளதுடன், பணத்தையும் மீட்டுள்ளனர்.
டெல்லி விகாஸ்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தலைமை அலுவலகத்தில் இருந்து, நேற்று மாலை ரூ.38 கோடி மதிப்புள்ள பணம் 4 வேன்களில் ஏற்றப்பட்டு, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், டெல்லியின் தென்கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்ட வேனில் ரூ.22 கோடி இருந்தது. அந்த வேனை பிரதீப் சுக்லா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாதுகாப்புக்காக வினய் படேல் என்பவர் துப்பாக்கி ஏந்தியபடி உடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், கோவிந்தபுரி ரயில் நிலையம் அருகே அந்த வேன் சென்றபோது, பாதுகாப்புக்கு சென்ற வினய் படேல், சிறுநீர் கழிக்க வேனை ஓரமாக நிறுத்த சொல்லி இருக்கிறார். டிரைவர் பிரதீப் சுக்லாவும் வேனை நிறுத்தி வினய் படேலை இறக்கிவிட்டுவிட்டு, வேனை அடுத்த தெருவில் நிறுத்திவிட்டு காத்திருப்பதாக கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பாதுகாவலர் வினய் படேல் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அங்கே வேனை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் பல இடங்களில் தேடியும் வேன் கிடைக்கவில்லை. உடனே அவர், இது குறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், டெல்லி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, ஒரு இடத்தில் அந்த வேன் நிறுத்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் வேனில் இருந்த ரூ.22 கோடியை எடுத்துக் கொண்டு டிரைவர் பிரதீப் சுக்லா தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து, டிரைவர் பிரதீப் டெல்லியை விட்டு தப்பி சென்று விடக்கூடாது என்று போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். டெல்லி எல்லை சீல் வைக்கப்பட்டு, வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, ரூ.22 கோடி பணப் பெட்டியுடன் டிரைவர் பிரதீப் நீண்ட தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணிய போலீசார், வேன் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு பண்டகசாலை கிட்டங்கிக்குள் டிரைவர் பிரதீப் சுக்லா பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அவரை கைது செய்ததுடன், பணப்பெட்டியையும் மீட்டனர். இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து பணக்கட்டுக்களை சரிபார்த்தபோது, அதில் 11 ஆயிரம் ரூபாய் குறைந்து இருந்தது. தற்போது பிரதீப் சுக்லாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, "கடந்த 2014 வருடம் மூல்சந்த் மேம்பாலம் அருகே ஒரு தொழிலதிபரிடம் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.8 கோடி வழிபறி செய்யப்பட்டது. அதன்பின் தற்போது நடந்துள்ள இந்த பணத்திருட்டுதான் அதிகபட்ச மதிப்புடைய திருட்டு'" என்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக