சனி, 3 அக்டோபர், 2015

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்.


எஜமானியை கொத்த முயன்ற பாம்பை, அவரது நாய் சண்டையிட்டு கொன்று, தனது உயிரை விட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமம் கதர் காலனியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் சாலை பணிகளுக்கான ஒப்பந்தகாரராக உள்ளார். இவருடைய மனைவி சாந்தி.


இவர் பக்கத்து ஊரான முள்ளன்விளையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன் வெளியூரில் தங்கியிருந்து என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகள் சாயர்புரம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் பட்டுராஜ் வெளியே சென்றுவிட்டார். மகள் முள்ளன்விளையில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றார். காலாண்டு விடுமுறை என்பதால், ஆசிரியை சாந்தி மட்டும் வீட்டில் இருந்தார்.

இவர்களது வீட்டில் பொமரேனியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். வெள்ளை நிறமும், அதிக முடியும் கொண்ட அந்த நாய்க்கு ‘பப்பி’ என்று செல்ல பெயரிட்டு அழைத்தனர். 

நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் பின்பகுதியில் அந்த நாய் நீண்ட நேரம் குரைத்து கொண்டிருந்தது. உடனே சாந்தி அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்பகுதியில் பாம்பு தோல் கிடந்தது.

எனவே அங்கு அடுக்கிவைக்கப்பட்டு இருந்த செங்கற்களை சாந்தி அகற்றி பார்த்தார். அப்போது செங்கலின் இடையில் இருந்து நல்ல பாம்பு ஒன்று வெளியே வந்து, படம் எடுத்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து பாம்பை விரட்ட முயன்றார். ஆனால் அந்த பாம்பு அந்த கம்பில் சுற்றியவாறு, சாந்தியை கொத்த சீறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, அந்த கம்பை கீழே போட்டுவிட்டார். பின்னரும் அந்த பாம்பு சாந்தியை நோக்கி சீறியவாறு வீட்டுக்குள் செல்ல முயன்றது. உடனே அங்கிருந்த நாய் திடீரென்று பாம்பின் மீது பாய்ந்து அதனை கடித்து குதறியது. 

ஆனால், நாயின் உடலை பாம்பு இறுக்கமாக சுற்றி கடித்தது. நாய் விடாமல் பாம்பின் தலையை கடித்து குதறியது. இதனால் அந்த பாம்பு செத்தது. நாயின் உடலில் பாம்பின் விஷம் ஏறியதால் அதுவும் மயங்கி சாய்ந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சாந்தி தனது நாயை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே நாய் இறந்தது. 

தனது எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு அதனை கொன்று உயிரை விட்ட நாயை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். ஆசிரியை சாந்தி வீட்டின் அருகே அந்த நாயின் உடல் புதைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...