சனி, 3 அக்டோபர், 2015

பன்றி இறைச்சி மாத்திரம்தான் எமக்கு ஹராமா ?


கடந்த வார விடுமுறை நாளான சனிக்கிழமையன்று முடி வெட்டுவதற்காக நான் வழமையாகச்  செல்லும் சலூனுக்கு முற்பகல் 10 மணிக்கு சென்று எனது டேர்ன் வரும்வரை கதிரையில் அமர்ந்திருந்து சலூனுக்கு எதிரே வீதியோரக்  காட்சிகளைப்  பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.


அங்கே சலூனுக்கு எதிர்ப்பக்கத்தில் வீதியோரமாக சர்பந் கடையை ஒட்டியவாறு ஒரு தமிழ் பெண் கொஞ்சம் நாவற் பழங்களைக் குவித்து வைத்து தெரு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள்.

அது சன நடமாட்டம் அதிகமான வீதியாகையால் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் துவிச்சக்கரவண்டிகளில் வந்தவர்களும் நாவற்பழங்களை  அவளிடம்  வாங்கிச்  சென்றனர்.

சிலர் நின்று அவளிடம் விலையை கேட்டுவிட்டு அதிலும் பேரம் பேசி இணக்கப்பாடு  இல்லாமல்  வாங்காமல்  சென்றனர். அது பரவாயில்லை .

ஆனால், நான் அவதானித்தவா்களில் நாவற்பழங்களை விசாரித்துவிட்டு வாங்காமல் சென்றவர்களில் அதிகமானவர்கள் அந்த நாவற்பழங்களில் சிலதை தமது வாயில் போட்டு திண்றுவிட்டே விலை இணங்காமல் சென்றுகெண்டிருந்தனர். 

ஒரு பொருளை வாங்கும்போது அதன் விலை எமக்கு கட்டுப்படியாகாதபோது அல்லது சந்தை விலையை விடவும் அதிகமாக இருக்கும்போது நாம் அதை வாங்காமல் விடுவது ஒன்றும் பிரச்சினையில்லை. எனினும், அந்தப்பொரு ளை கொள்வனவு செய்யாமல் அதன் ஒரு பகுதியை நாம் பெற்றுக்கொண்டு செல்வது  எந்தளவு  நியாயமானது  என்பதே என் கேள்வி ?

அவ்வாறு அவர்கள் நாவற்பழங்களை சேம்பிலுக்கு ருசி பார்க்கும்போது அந்தப் பெண்ணின் முகமும் நெற்றியும் ஒரு வகையாக சுருங்குவதை என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

முடிவெட்டும் எனது டேர்ன் வந்ததும் வெட்டிமுடிந்து போகும்போது நானும் நாவற்பழங்கள் கொஞ்சம் வாங்குவதற்காக அவளிடம் சென்று விலையைக் கேட்டேன். சற்று நியாயமான விலையாகத்தான் இருந்தது. (ஆனால் நான் வாயில் ஒன்றையும் எடுத்து போட்டுக்கொள்ளவில்லை)

பிறகு அவளிடம் காசைக் கொடுத்துவிட்டு சலூனுக்கள் இருக்கும்போது அந்த நாவற்பழக்காரியிடம் கேட்க வேண்டும் என்று என்னுள் எழுந்த கேள்வியை அவளிடம் கேட்டேன்.

அதாவது : ஏன் சிலர் நாவற்பழங்களை எடுத்து சேம்பிலுக்கு ருசி பார்க்கும்போது உங்கள் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது ? என்று கேட்டேன்.

பிறகு என்ன ஐயா , இந்த நாவற்பழங்களை நான் விலை கொடுத்து வாங்கி வந்தே இங்கு விற்பனை செய்கிறேன். ஒரு கொத்து பழம் வித்தால் 10 ரூபா காசு கிடைக்கும். அதிலும் ருசி பார்க்கிற ஆக்கள் வாங்கிட்டுப்போனாலும் பரவாயில்லை. சும்மா திண்டுட்டு போறாங்க . 

அப்படி ஆளுக்கு ரெண்டு பழத்த வாய்க்குள் போட்டா அரைக்கொத்து பழம் குறைந்துவிடும். பிறகு என் முதலும் கிடைக்காதே . என் பிள்ளை இரண்டு படிக்குது அவருக்கும் சுகமில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் கூறினாள்.

 அவளது இந்த பதிலைக் கேட்டதும் எனக்கு வேதனையாக இருந்தது. அதிலும் அவள் கொளுத்தும் வெயிலிலும் பாதத்தில் செருப்பின்றி நடைபாதைக் கட்டில் அமர்ந்திருந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அன்பார்ந்த சகோதரர்களே...

இது எமக்கு ஒரு சிறிய விசயமாக தோன்றலாம். ஆனால் இதனால் இன்னொருவர் பாதிக்கப்படுகிறார், எம்மிடம் அதை சொல்ல முடியாமல் மனவேதனையடைகிறார். இஸ்லாம் இன்னொருவரது பொருளை அவரது விருப்பமின்றி  அடைவதை   எமக்கு   ஹராமாக்கி  இருக்கிறது.

அதிலும் முக்கியமாக இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன். அந்த நாவற் பழக்கார பெண்ணிடம் இலவசமாக நாவற்பழங்களை ருசி பார்த்துச் சென்றவர்களில் ஒரு மௌலவியையும் மற்றும் எந்நேரமும் பள்ளியும் ஆளுமாக இபாதத்தில் இருப்பவர்களில் இருவரையும் நான் கண்டேன்.

ஹராம் என்றால் பன்றியின் இறைச்சி மாத்திரம்தான் என்று எமது சமூகம் கருதிக்கொண்டிருக்கின்றதா   என்பது  எனக்குப்  புரியவில்லை !

ஜமீல் கல்குடா..
Jameel Kalkudah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...